இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மின்சார பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. வரும் நாட்களில் மின்சாரம் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில்,பாகிஸ்தானில் 14 மணிநேரத்துக்கு மேலாக நிலவும் மின்தட்டுப்பாடு காரணமாக செல்போன் மற்றும் இணைய சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொலைத்தொடர்பு துறை வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வது குறித்து கத்தார் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.