ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
மயிலாடுதுறை மாவட்டம் “பெருமுலை” என்ற “திருவிளையாட்டம்” கிராமத்தில், சோழமன்னன் கோச்செங்கண்ணனால் கட்டப்பட்ட மாடக்கோயிலான இந்த சிவத்தலம், திருக்குளத்துடன் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் அழகுற அமைந்துள்ளது. மூலவர் ‘தானாக முளைத்து எழுந்தவர்’ என்று கருதப்படுவதால், ‘சுயம்புநாதர்’ என்றும், அம்மன் முல்லைவனத்தில் இறைவனை துதித்து தவமிருந்து இத்தலத்தில் எழுந்தருளியமையால் ‘முல்லைவனநாயகி’ என்றும், அழைக்கப்படுகின்றனர்.
“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது,
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது,
நாதன் நாமம் நமச்சிவாயமே”
- என்ற திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலுக்கேற்ப அமைந்துள்ள இக்கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ்த் தாய் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம்.
இத்தலத்தில் சிவபெருமான் உறையும் இடம், உயர்ந்த மாடத்தின் மீது அமைந்துள்ளதும், அந்த மாடத்திலேயே கோயிலின் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளதும் தனிச்சிறப்பாகும். மாடக்கோயிலின் முன்புறம் பால விநாயகர் வீற்றிருக்க, இறைவனும், இறைவியும் கிழக்குத் திசைநோக்கி, திருமணக்கோலத்தில் அருள் செய்வது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இங்குள்ள பெரிய சிவலிங்கமூர்த்திபோல, அருகில் வேறு எந்த தலத்திலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கோயிலின் பின்புறத்தில் கன்னிமூல கணபதி ,வள்ளி தெய்வானையுடன் முருகன், மகாலட்சுமி, தெட்சிணாமூர்த்தி ஆகியோர் தனித்தனி சந்நதிகளில், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகுடனும், அருள் வடிவங்களுடனும் அமைந்துள்ளனர்.
“முற்காலத்தில் இப்பகுதி முழுவதும் பெரும் காடுகளாக விளங்கின. குறிப்பாக இப்பகுதி முல்லைவனமாக இருந்திருக்கிறது. வேட்டையாடுவதற்காக வந்த சோழ மன்னன், பணியாட்களை விட்டுப் பிரிந்து, தனியே குதிரை மீது பயணித்துச் சென்றிருக்கிறான்.
அப்போது ஓரிடத்தில் குதிரையின் கால் குளம்பு பட்டவுடன், ரத்தம் நீரூற்றுப்போல் பீறிட்டு வரவே, மன்னன் திகைத்துப் போனான். குதிரையை விட்டு இறங்கி இரத்தம் பீறிட்ட இடத்தைப் பார்த்தபோது,அங்கே ஒரு மிகப்பெரிய சிவலிங்கம் இருப்பதைக் கண்டு மெய்ச்சிலிர்தான். உடனே மூலிகை இலைகளால் சிகிச்சை செய்து இரத்தம் வருவதைத் தடுத்து நிறுத்தினான்.
இதையும் படிங்க : திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம் – தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு..!!
அதற்குள் அரசனை தேடி பணியாட்கள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். அரசன் அந்த சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்து, தலைநகரில் சிறப்பான கோயில் அமைத்து, அதில் வைத்து வணங்கிவர முடிவு செய்தான். பணியாட்களின் உதவியுடன் சிவலிங்கத்தை எடுக்க, பூமியைத் தோண்டினான்.
தோண்ட… தோண்ட…. சிவலிங்கம் பெருமுலையாக வளர்ந்து கொண்டு இருக்கவே, இறைவனின் திருவுளத்தை அறிந்து, வேறு வழியின்றி அந்த இடத்திலேயே கோயில் அமைத்தான். அதன்படி இறைவனின் திருவிளையாடலால் ,இங்கு இறைவன் தானாக தோன்றியதால் ‘சுயம்புநாதர்’என்றும், இந்த முல்லைவனத்தில் இறைவனை நோக்கி தவமிருந்த அன்னை உமாதேவியே எழுந்தருளியதால், ‘முல்லைவனநாயகி’ என்றும், திருநாமங்களை பெற்றனர்.
இந்த ஊரில் இறைவன் பெருமுலையாக தோன்றியதால், முதலில் இந்த ஊரும் ‘பெருமுலை’ என்றே அழைக்கப்பட்டது. பழைய பதிவேடுகளிலும் ‘பெருமுலை’ என்ற பெயரை இன்றும் காணலாம். அவ்வூர் தற்போது ‘திருவிளையாட்டம்’ என்றழைக்கப்படுகிறது என்கிறது ” தலவரலாறு.
திருஞானசம்பந்தர் அறக்கட்டளையைச் சேர்ந்த தலைமை ஆசிரியை வளர்மதியிடம் பேசிய போது,
” சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைமையான இந்தக் கோயில், மிகவும் சிதலமடைந்துக் கிடந்தது. 1999 -ல் தான் அறக்கட்டளையின் மூலம் உழவாரப் பணிகள் செய்தோம்.அதன்பிறகு கோயிலில் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த 2003 ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அஷ்டமி, சஷ்டி ,பிரதோஷம், நவராத்திரி ,கார்த்திகை போன்ற விசேஷ நாட்களில் மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஆனி மாதம் அனுஷ நட்சத்திர நாளில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துக் கொண்டு , திருமணம் வேண்டி வழிபடுபவர்கள், மறு ஆண்டு தம்பதி சமேதராக இங்கு வருவதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம்.
அதேபோல் சக்தி வாய்ந்த இந்த அம்பாளிடம், நம் கவலைகளையும், பிரச்னைகளையும் அவள்முன் வைத்து தீபமேற்றி வழிபடுகிறபோது அனைத்திற்கும் தீர்வு கிட்டும்.இந்த அம்பாள் மனதார வழிபடுவோரிடம் பேசுவாள். எத்தகைய கவலையோடு இக்கோயிலுக்கு வந்தாலும், அதனை மறந்து வெளி வருவதை உணர முடியும் ” என்றார்.
இத்தலத்தின் வழிபாடுகள் குறித்து சிவா குருக்களிடம் பேசினோம். “வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, கிழமைகளில் அம்பாள் மற்றும் துர்க்கை சந்நதிகளில் 11 வாரங்கள் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட, திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
இத்தலத்திலுள்ள தெட்சிணாமூர்த்திக்கு 11 வாரங்கள் தொடர்ந்து விளக்கேற்றித் தரிசிக்க கல்வி, ஞானம் பெருகி, வேலை வாய்ப்பு உடனே கிடைக்கும். பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளன்று வணங்க, சகல தோஷங்களும் நீங்கும். தேடிவந்து வணங்குவோர்க்கு, வாரி வழங்கும் கருணை வடிவமாக இத்தலத்து அம்பாள் விளங்குவதால், வாழ்வில் ஏற்படும் சகல பிரச்னைக்கும் தீர்வு அளிக்கும் அற்புத சக்தியாக இருக்கிறாள். எனவே பக்தர்கள் இத்தலத்தைத் தரிசித்து சகல வளமும் பெற வேண்டுகிறோம்” என்றார்.
மீண்டும் ஓர் அற்புதமான ஆலயத்தில் சந்திக்கும் வரை, உங்களிடம் இருந்து விடை பெறுவது
ஐ தமிழ்.