திருவாரூரில் தனது தாயின் நினைவாக ரூ 5 கோடி செலவில் தாஜ்மஹால் (taj mahal) வடிவில் நினைவு இல்லத்தை கட்டியுள்ளார் அவரது மகன்.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் அப்துல் காதர் – ஜெய்லானி பிவி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு நான்கு மகள்களும், அம்ருதீன் ஷேக் தாவூத் என்ற மகனும் உள்ளார். அப்துல் காதர் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடையை நடத்தி வந்த நிலையில், அவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூத்திற்கு 11 வயது இருக்கும்போது அப்துல் காதர் உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் ஜெய்லானி பீவி அந்த கடையை நிர்வகித்து வந்ததோடு தனது மகன், மகள்களோடு திருவாரூரில் வசித்து வந்துள்ளார். மேலும், தனது பிள்ளைகளை நன்கு படிக்கவும் வைத்துள்ளார். இவர்களில் அம்ருதீன் ஷேக் தாவூத் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 72 வது வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சிறுவயதில் இருந்து தனது தாயின் வழிகாட்டுதலின்படி வளர்ந்த அப்துல் அம்ருதீன் ஷேக் தாவூத், தாயார் உயிரிழந்த நினைவலைகளால் தவித்து வந்துள்ளார்.
தனது தாயாருக்கு வாழ்நாளில் எதையாவது செய்து விட வேண்டும் என்று தீவிரமாக யோசித்த இவருக்கு தனது தாயாருக்கு ஒரு நினைவு இல்லம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அந்த இல்லம் அனைவராலும் பேசப்படும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் திருச்சியை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு தனது தாயின் நினைவு இல்லத்தை தாஜ்மஹால் வடிவில் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்களும், தொழிலாளர்களும் வரவழைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் தாஜ்மஹால் வடிவில் தனது தாய்க்கு நினைவு இல்லத்தை கட்டி முடித்துள்ளார். இந்த தாஜ்மஹால் வடிவ நினைவு இல்லத்தின் உள்ளேயே ஜெய்லானி பிவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழாவானது கடந்த ஜூன் இரண்டாம் தேதி நடந்த நிலையில், பொதுமக்களுக்காக இந்த நினைவு இல்லம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நினைவு இல்லத்தை எந்த மதத்தை சேர்ந்தவர்களும் வந்து பார்க்கலாம் என்றும், ஐந்து வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு வந்து தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மதராசா பள்ளி ஒன்றும் இங்கே இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் தற்போது 10 மாணவ மாணவிகள் வரை தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். மேலும், ஜெய்லானி பீவி அம்மாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததை அடுத்து அம்மாவாசை அன்று ஆயிரம் பேருக்கு அம்ருதீன் ஷேக் தாவூத் தனது கையாலேயே பிரியாணி சமைத்து அன்னதானமும் வழங்கி வருகிறார். இவரது இந்த செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.