மறு உத்தரவு வரும்வரை ஆவடி நோக்கி செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில், சிக்னலை கடந்து சென்றது. இதனால் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
பணிமனையில் இருந்து புறப்பட்ட ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக, சென்னையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில், மேற்கு மண்டல ரயில்கள், வடமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மறு உத்தரவு வரும்வரை ஆவடி நோக்கி செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.