தமிழகம் , புதுச்சேரியில் அடுத்த 4-5 நாட்களுக்கு பரவலாக மழை(Rain) பெய்யும் என தேசிய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அண்டை பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சியின் தாக்கத்தின் கீழ், வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
இமாலய பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் சூறாவளி சுழற்சி வலுவடைந்து வருகிறது.
தென் மேற்கு பருவமழை, வங்காள விரிகுடாவின் மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளதால், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா,தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளது.