ரேஷன் கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 35 ஆயிரத்து 323 நியாய விலைக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலம் அரிசி, கோதுமை, சக்கரை, உள்ளிட்ட பல பொருட்கள் இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் ஏழை நடுத்தர குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி 3 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். இதனை அடுத்து அரசு விரைவில் பரிசீலிக்கும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
இந்த நிலையில் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை அடுத்து நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழக அரசு உத்தரவின் படி கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளையும், தேர்வு நிலை, சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு முரண்பாடுகள் ஏதும் இல்லாத தீர்வுகளையும் அலசி ஆராய்ந்து பரிசீலித்தது.
இது குறித்த விரிவான பரிந்துரைகளை பதிவாளருக்கு அனுப்பிட வேண்டும் என கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன்கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கையை, ஜூலை 14-க்குள் கூட்டுறவுத்துறை அமைத்த குழுவிடம் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.