கச்சத்தீவு அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள், மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்று பின்னர் சிறையில் அடைத்தனர்.
தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய ஜனவரி 25 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட 56 மீனவர்கள் இன்னும் தாயகம் திரும்பவில்லை. இந்த நிலையில் கச்சத்தீவு அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகை மாவட்டம் அக்கறைப்பேட்டியைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேரும் வேதாரண்யத்தை சேர்ந்த பல மீனவர்களும் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி 21 பேரை சிறைப்பிடித்துள்ளது. மீனவர்கள் சென்ற 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை பருத்தி துறை துறைமுகத்தில் உள்ள இலங்கை மீன்வள துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்குள் மேலும் 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்து இருப்பது மீனவ கிராமங்களில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.