இலங்கை அரசுக்கு எதிராக அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ராஜபக்சே அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ,நேற்று போராட்டம் வெடித்தது.
இதில் மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. ராஜபக்ச குடும்பத்தினரின் என 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது . இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி பிரதமராக இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் கொழும்பு அரசு மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ராணுவம் அவர்களை அப்புறப்படுத்தியதை அடுத்து இன்று காலை மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார்.
இதேவேளை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று காலையிலேயே மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.