நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி மாணவியர்களுக்கான கையுந்து பந்து போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகளுக்கு மொத்தம் ரூபாய்.13.50 லட்சம் பரிசுத் தொகை, பதக்கங்கள் மற்றும் பரிசுக் கோப்பைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் உள்ள 17 இடங்களில் ஜுலை 01-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப்போட்டிகள் ஜுலை 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் பள்ளி மாணவ – மாணவியர்களுக்கான கையுந்து பந்து போட்டிகள் ஜுலை 1 – முதல் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் 38 – மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இதில் நேற்று நடைபெற்ற கையுந்து பந்து பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் சேலம், ஈரோடு. கிருஷ்ணகிரி, மற்றும் சென்னை அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சேலம் அணி முதல் இடத்தையும், சென்னை அணி இரண்டாம் இடத்தையும், ஈரோடு அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
இதையடுத்து முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகளுக்கு மொத்தம் ரூபாய்.13.50 இலட்சம் பரிசுத் தொகை, பதக்கங்கள் மற்றும் பரிசுக் கோப்பைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.