திருநெல்வேலி மாநகராட்சி 36வது வார்டு மாமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த சின்னத்தாய், தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில், ” திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பெண் மாமன்ற உறுப்பினராக என்னை தேர்வு செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், அதற்கு பரிந்துரை செய்த பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய மு. அப்துல் வஹாப் அவர்களுக்கும் முதலில் எனது நன்றி.
எனது வார்டு பகுதியான கோரிப்பள்ளம், பெரியார் நகர் ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கு பாளை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சரோஜினி நீர்தேக்க தொட்டியின் மூலம் பல ஆண்டுகளாக ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாநகராட்சி அதிகாரி உயர் ஜாதி மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து என்னை பழிவாங்கும் நோக்கில் அந்த நடைமுறையை மாற்றி அமைத்ததன் முதல் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனை மாநகராட்சி உயர் அதிகாரி முதல் நமது திராவிட கழக சட்டமன்ற உறுப்பினர் மேயர், துணைமேயர், என அனைவரிடத்திலும் எடுத்து கூறி அதை நிவர்த்தி செய்யவில்லை. இவ்விசயத்தில் ஜாதி பார்தது முடிவு எடுத்துள்ளார்கள். இது என் மனதை ஆரம்ப முதலே பாதித்து வந்தது. மேலும் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகத்தை “விராஜ்” என்ற தனியார் தபரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட நாள் முதல் நமது தமிழக முதல்வருக்கும், அவரின் நல்லாட்சிக்கும் அவசொல் ஏற்படுகிற விதமாக குடிநீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடைந்து வருகிறது. வார்டு தொடர்பாக எந்த ஒரு பணியையும் அதிகாரிகளிடம் எடுத்து கூறினாலும் ஜாதி அடிப்படையில் அதனை கண்டு கொள்வதில்லை.
இதையும் படிங்க: பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை- அண்ணாமலை!
அண்ணாநகர் பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நிரந்தர தீர்வு இல்லை. குடிதண்ணீர் வழங்குதல், சுகாதார தாய்மை பணி, மின் விளக்கு பணி, மின்சாரதுறை பணி வார்டு கட்டுமான பணி என அனைத்தும் எங்கள் வார்டில் முடங்கி உள்ளது. மேலும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினரான எனக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் அனைவரிடத்திலும், ஜாதி தலைவிரித்து ஆடுகிறது. இவர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய முடியவில்லை.
தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் எனது வார்டில் பிரச்சாரம் முதல் பல்வேறு நிலையில் நான் அவமானம் பட்டேன் என்பதை மிகுந்த மன வேதனையுடன் கூறிக் கொள்வதோடு இந்நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் எனது 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவியை இன்று முதல் நான் ராஜினாமா செய்கிறேன். என்பதை மன வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். என்னை தேர்ந்தெடுத்த வார்டு மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தாகம் தணிக்க தண்ணீர் பந்தல் – அதிமுகவினருக்கு எடப்பாடியார் அன்பு வேண்டுகோள்
இந்த ராஜினாமா கடிதத்தை ஆன்லைன் மூலமாக மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோருக்கு அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப், மாமன்ற உறுப்பினர் சின்னத்தாய் மற்றும் அவரது கணவர் கிருஷ்ணன் ஆகியோரை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேயர் சரவணனிடம் கேட்டபோது, மருத்துவக் காரணங்களுக்காக சென்னை வந்திருப்பதாகவும், தனக்கு இதுகுறித்த தகவல் எதுவும் தெரியவில்லை எனப் பதிலளித்தார். இதற்கிடையில், “ராஜினாமா செய்யப் போவதாக ஆணையரிடம் நேரில் கடிதம் கொடுக்கவில்லை. வாட்ஸ்அப் குழுவில் தான் பதிவிட்டோம். மேலும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், ராஜினாமா முடிவைக் கைவிட்டு விட்டதாக” கவுன்சிலர் சின்னத்தாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.