பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற அன்று கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவர் குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறானது என கடலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், இந்த கொலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவினரை தொடர்புப்படுத்திப் பேசி இருந்ததால்,அண்ணாமலை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஊழல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களுக்காக நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு, என் மீது பல வழக்குகள் தொடுத்திருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ” திமுகவினரால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்..” அண்ணாமலை மீது வழக்குப்பதிவு !
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில்,”கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சகோதரி கோமதி அவர்கள், திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்துப் பதிவிட்டதற்கு, என் மீது காவல்துறையினரை ஏவி விட்டு, பாசிச திமுக அரசு ஒரு வழக்கை பதிவு செய்திருப்பதாக அறிகிறேன்.
திமுக மறைக்கத் துடித்த உண்மை இதோ. பாஜகவுக்கு வாக்களித்த காரணத்திற்காகத் தான், சகோதரி கோமதி அவர்கள் கொலை செய்யப்பட்டார் என்பதை, அவரது கணவர் திரு ஜெயக்குமார் மற்றும் அவரது சொந்தங்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். முன்விரோதம் என்பது திமுகவின் சப்பைக்கட்டு நாடகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
ஊழல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களுக்காக நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு, என் மீது பல வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களே என் மீது இரண்டு வழக்குகள் தொடுத்திருக்கிறார்.
இவ்வாறு பொய்யான வழக்குகள் தொடுத்து எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று திமுக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. உங்கள் பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.