14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் பல கடற்கரைகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது எற்படும் விபத்துகளால் மனித உயிர்களை இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற விபத்துகளைக் குறைப்பதற்கும், நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை காப்பாற்றிடும் வகையிலும் மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்காக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சி தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் ரூ.53 இலட்சம் மதிப்பீட்டில் ITUS SPORTS AND SAFETY Pvt. Ltd., என்ற நிறுவனம் மூலம் தமிழகத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
இந்தப் பயிற்சி மீனவ இளைஞர்களின் இயற்கையான நீச்சல் திறன்களை மேம்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமணைக்கு அழைத்துச் செல்லும் முன்னர் அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிப்பதற்கு உறுதுணையாக அமையும்.
பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களின் சேவையினை புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் பயன்படுத்திக்கொள்ள இயலும். இப்பயிற்சி மூலம் தமிழகத்தை சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு கடற்கரைப் பாதுகாப்பு, மீட்புப் பணிகள், கடற்கரை விடுதிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பும் கிடைப்பதற்கு உதவிகரமாக அமையும் என தெரிவித்துள்ளனர்