தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து டில்லிக்கு செல்லும் தக்ஷன எக்ஸ்பிரஸ் ரயில் உள்ள லக்கேஜ் பெட்டியில் நேற்று நள்ளிரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
செகந்திராபாத்தில் இருந்து டெல்லிக்கு தக்ஷன எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பகிடிப்பள்ளி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அதில் லக்கேஜ்கள் ஏற்றப்பட்டிருந்த பெட்டியில் திடீரென்று தீப்பற்றி வேகமாக எரிய துவங்கியது.
ரயிலின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து புகை வருவதை உணர்ந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து நிறுத்தி இறங்கி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து லக்கேஜ் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர்.
இதனால் அந்த பெட்டியில் ஏற்றப்பட்டிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. அதன் பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர்.
நள்ளிரவில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் இடையே சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.