தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மதுபான விடுதியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக வெளிநாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், ஆசிரியர்கள் உட்பட 21 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கியது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இரவு நேரத்தில் அனுமதிபெற்று இயங்கி வந்த மதுபான விடுதியில் ஏராளமானோர் மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென அப்பகுதிக்கு வந்த அந்த மர்ம கும்பல், மதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். அதேபோல் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 பேர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற மதுபான விடுதிக்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.