தமிழ் சினிமாவில் சமூக நீதி அரசியல் பேசும் துடிப்பான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் தான் மாமன்னன்.
கடந்த மாதம் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது . வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ள இந்த படத்திற்கு பலரும் பாராட்டுகளையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .
அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மாமன்னன் படம் குறித்து அவரது கருத்தை தெரிவித்துள்ளார் .இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது :
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
தலைவரின் டீவீட்டுக்கு பதில் ட்வீட் போட்டுள்ள நடிகரும் ,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறிருப்பதாவது :
சமத்துவம் போற்றும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும் என தெரிவித்துள்ளார் .
அதேபோல் தலைவரின் டீவீட்டுக்கு பதில் ட்வீட் போட்டுள்ள மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறிருப்பதாவது :
என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.