மாநில அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக கவர்னர் செயல்பட்டால், அது கூட்டாட்சி அமைப்பிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கரார் காட்டியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்வதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என்று குறிப்பிட்டனர்.மேலும் கவர்னரின் அதிகாரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:-
மாநில அமைச்சரவை அனுப்பக் கூடிய பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப என்ன அதிகாரம் உள்ளது?
பேரறிவாளன் விவகாரத்தில் கவனரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. கவர்னர், ஜனாதொபதியின் அதிகாரங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?
மாநில அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக கவர்னர் செயல்பட்டால், அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். மாநில கவர்னர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல முடியாது.
பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் . பேரறிவாளன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க தமிழக அரசுக்கும், வழக்கறிஞருக்கும், நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.