அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் எதிர்வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத்தலைமை பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒற்றைத் தலைமை கொண்டுவரப்பட்டால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எழுதியதாக கடிதம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக-வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில் இரட்டை தலைமையால் உட்கட்சி நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் சிலர் கருதுகின்றனர். ஓ.பன்னீர் செல்வம், ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் ஒற்றை தலைமையை ஓபிஎஸ் முற்றிலுமாக நிராகரித்து விட்டார் என்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னோட்டமாக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டாலும், பொதுவாக ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியே அனைவரும் பேசியுள்ளனர். இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில், ஒற்றைத் தலைமை கொண்டுவரப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம். மேலும் கட்சி விதிகள் திருத்தப்பட்டால் சட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.