3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக பிரதமர் அறிவித்ததை வரவேற்கிறேன் என்றும் இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஹரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் 12 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் அது தோல்வியில் முடிந்துள்ள நிலையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்ள் இன்று முதல் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து, இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக பிரதமர் அறிவித்ததை வரவேற்கிறேன் என்றும் இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும், தெரிவித்துள்ள ஸ்டாலின், மக்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்கள் தான் மதிக்கப்பட வேண்டும் என்றும், இதுவே வரலாறு சொல்லும் பாடம் என்றும் தெரிவித்துள்ளார்.