ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படை வெளியேறிய நிலையில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அன்று முதலே தாலிபான்கள் அந்த நாட்டில் பல்வேறு கொடுமையான உத்தரவுகளையும் சட்டங்களையும் பிறபித்து வருகின்றனர்.
இந்நிலையில் தாலிபான் அரசின் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது “ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நேட்டோ, அமெரிக்கப் பாதுகாப்பில் ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் ஆட்சி செய்தனர் என்றும் தாலிபான்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்த 2000 முதல் 2020ஆம் ஆண்டு வரை பள்ளிகளிலும், உயர்கல்வி நிலையங்களிலும் படித்துப் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறினார்.
அத்துடன் இன்று உள்ள முதுகலைப் படிப்புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்பு குறைவானவை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் தாலிபான்களின் தேசத்துக்குப் பயன்படும், மதிப்புகளை உணர்ந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை பணியமர்த்த இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உள்ளிட்ட பலரும் கல்வி கற்று சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்த நிலையில், தாலிபான் அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.