புதுச்சேரியில் தாதாவாக இருக்கும் அன்பரசுக்கு (பெப்சி விஜயன்) ரூ. 25 லட்சம் கொடுக்க வேண்டிய இக்கட்டில் இருக்கிறார் சதீஷின் (சந்தானம்) காதலி சோபியா (சுரபி). அந்தப் பணத்தை சதீஷ் திரட்டிக் கொடுக்கிறார்.

ஆனால், அது அன்பரசுவிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டப் பணத்தின் ஒருபகுதி. ‘என் பணத்தைத் திருடி எனக்கே கொடுக்கிறாயா?’ என்று சதீஷையும் அவர் கூட்டாளிகளையும் துரத்துகிறார் அன்பரசு. தப்பிக்க ஓடும் அவர்கள், பாழடைந்த நிலையில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரர் பங்களாவுக்குள் நுழைகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பேய்களும் அவற்றுடன் சதீஷ் கூட்டணியும் அவர்களைத் தேடி வந்து சிக்கும் ஆட்களும் ஆடும் ஆட்டம்தான் கதை.

இதய பலவீனம் கொண்டவர்கள், குழந்தைகள், பெண்கள் பார்க்கக் கூடாது என்றெல்லாம் பயமுறுத்திய பேய் படங்கள் வந்தது ஒரு காலம். தற்போது பேய்களுடன் காமெடி செய்து, அவற்றைக் கலாய்த்துக் கலகலப்பூட்டுவது தற்போதைய ஹாரர் படங்களின் ட்ரெண்ட்.

அச்சு அசலாக அப்படியொரு ‘மரண’ கலாய் கதைக் களத்தைத் தேர்வு செய்துகொண்டு, மனிதர்களும் பேய்களும் சந்திக்கும் தருணங்களை அங்கம் (slapstick) மற்றும் அங்கத நகைச்சுவையின் வழியே கலகலப்பான கொண்டாட்டமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த்.

குறிப்பாக சதீஷாக வரும் சந்தானம் தனது ஒன்லைனர் ‘பன்ச்’களின் வழியாக சக கதாபாத்திரங்களை உள்ளீட்டு அர்த்தத்துடன் செய்யும் அங்கதக் கலாய்ப்புகள் திரையரங்கில் பெரும் சிரிப்பலைகளை உருவாக்குகின்றன. அதில், டாஸ்மாக்கில் எக்ஸ்ட்ரா வசூல் பற்றி அடிக்கும் ‘பன்ச்’ டாபிக்கல்.

எப்பேர்ப்பட்ட வில்லனையும் தனது ‘கலாய்’ வழியாக காலி செய்துவிடும் சந்தானத்திடம் இந்தப் படத்தில் வசமாகச் சிக்கி நம்மைச் சிரிக்க வைக்கிறார் பெப்சி விஜயன். வில்லன் பேயையும் அவர் விட்டு வைக்கவில்லை. நாயகி சுரபி, பார்க்க அழகாகவும் நடிப்பில் சுட்டியாகவும் இருந்தாலும் அவருக்கான காட்சிகள் குறைவுதான். என்றாலும் துணைக் கதாபாத்திரங்களைத் திரைக்கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருப்பது நல்லதாக உள்ளது.