இயக்குனர் விக்னேஷ் சிவன் (vignesh shivan) மற்றும் நயன்தாரா மீது அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனுடைய (vignesh shivan) தந்தை சிவகொழுந்துவிற்கு ஒன்பது உடன் பிறந்தவர்கள் உள்ளனர். இதில், விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் அவரது மனைவி பிரேமாவுடன் லால்குடியிலும், விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் அவரது மனைவி சரோஜா உடன் கோவையிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று லால்குடி காவல் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு குஞ்சிதபாதம் மற்றும் அவருடைய அண்ணன் மாணிக்கம் இருவரும் சென்று விக்னேஷ் சிவன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் விக்னேஷ்சிவனும் அவரது தாய் மீனாகுமாரியும் சேர்ந்து எங்களுக்கு தெரியாமல் சிவகொழுந்துவின் சொத்தை ஏமாற்றி விற்று விட்டதாகவும், அதில் பல வில்லங்கங்கள் இருப்பதாகவும், பொது சொத்தை விற்ற கிரைய பத்திரத்தில் மேற்படி நிலத்தில் பிற்காலத்தில் ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால் தன்னுடைய சொத்து அல்லது தன் வாரிசுகளின் சொத்துகளின் மூலமாக வில்லங்கத்தை ஈடு செய்வதாக உறுதி கூறி அந்த நிலத்தை விற்பனை செய்துள்ளனர்.
எனவே, இந்த மோசடி தொடர்பாக சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவருடைய மனைவி மீனா குமாரி மற்றும் மகன் விக்னேஷ் சிவன், மருமகள் நயன்தாரா மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து செய்யுமாறு புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சொத்தில் ஒரு பங்கில் மட்டுமே சிவகொழுந்துவிற்கு உரிமை உள்ளது என்றும், மீதமுள்ள எட்டு பேருக்கும் பங்குகள் சென்றடைய வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாய் மீனாகுமாரி ஆகியோர் உதவினால் மட்டுமே இந்த வில்லங்கம் தீரும் எனவும், விரைவில் சொத்தை விற்க விக்னேஷ் சிவன் உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.