எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ்ரோடி, 6 மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இடை நீக்கத்தைத் திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது .
கடந்த சில நாட்களாக அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் கட்சித் தலைவர்கள்,அமைச்சர்கள் ,நிர்வாகிகள் என இருகட்சிகளுக்குள் மோதல் போக்கு இல்லையென்று தெரிவித்தாலும், தொண்டர்கள் மத்தியில் போஸ்டர் வழியாகவும், ஆர்ப்பாட்டங்கள் வழியாகவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து பாஜகவைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுக – பாஜக இடையே பிரச்சினை ஏற்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர் .மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில்,மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாவட்ட தலைவர் திரு.தினேஷ் ரோடி அவர்கள் தற்போது வகித்தும் வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நேற்றிரவு எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து திரு தினேஷ் ரோடி அவர்களை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் ,
மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் திரு தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் திரு வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ள சம்பவம் இரு கட்சிகளுக்கிடையே புயலை கிளப்பியுள்ளது