குறுவை விவசாயத்திற்கு போதிய நீர் இல்லாததால் கருகிய பயிர்களைக் கண்டு நாகையில் விவசாயி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், சட்டரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து காவிரி நீரை பெறவேண்டும் என டிடிவி தினகரன் முதலமைச்சாய் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நாகையில் கருகிய குறுவை பயிர்களைக் கண்டு விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
“நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் கருகிய தனது பயிர்களை கண்டு மனமுடைந்த விவசாயி எம்.கே.ராஜ்குமார் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி நீரை நம்பி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் ஒருவரான திரு.ராஜ்குமாரின் பயிர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் முற்றிலும் கருகி வீணான நிலையில், சோகம் தாங்காமல் நெஞ்சுவலி ஏற்பட்டு விவசாய நிலத்திலேயே உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தன் விவசாய நிலத்தில் கருகிய பயிர்களை தானே அழிக்க வேண்டிய சூழல் உருவானதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான நீரை பெற்றுத்தந்து விவசாயிகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.