பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கத்தையும் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமக்கள் தைப் பொங்கலை கொண்டாடும் வகையில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், மஞ்சள் தூள் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுபுக்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கும், 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இந்த வருடம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்படாததாது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கத்தையும் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.