தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின்வெட்டு காரணமாக பொது மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 716மெகாவாட் மின்சாரம் கிடைக்காத காரணத்தினாலும், தமிழகத்தின் மின் உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவை என்ற நிலையில், அதற்கு குறைவான நிலக்கரி மட்டுமே கிடைப்பதும் தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாததற்கு காரணம் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு இரண்டு மாத காலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு டெண்டர்கள் கோரப்பட்டு இரண்டு நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அந்த வகையில், இன்னும் இரண்டொரு நாளில் தமிழகத்தில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.