தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
அந்த வகையில் நேற்றும் திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி உள்ளிட்டட பல பகுதிகளில் மழை பெய்தது.
சென்னையில் சைதாப்பேட்டை, ராயபுரம், பெரம்பூர், மாதவரம், புரசைவாக்கம், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையார், கிண்டி, அரும்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை முதல் வரும் 07ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிலகிரி. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.