சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யபட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி ஆணையம் கூறிய மிக மிகச் சிறிதளவு தண்ணீரான நொடிக்கு 5000 கனஅடி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் 21.9.2023 அன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் பரவலாக கன்னட இனவெறி அமைப்புகளும், இனவெறி உழவர் சங்கங்களும் பல வகையான போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது..
குறிப்பாக, காவிரி விவகாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய முப்பெரும் எதிர்க்கட்சிகளும், ஒன்றை புள்ளியில் நின்று, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிராகவும், கன்னட இனவெறியோடு போராடி வருகின்றனர்.
அண்மையில் ,கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் அரசுப் பிரதிநிதியாக இருக்கும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் படத்தை கிழித்து எறிந்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல், தமிழ்நாடு முதலமைச்சரின் உருவப்படத்தை முன் வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து அவமதித்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள தமிழர்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர்களை மு.க.ஸ்டாலின் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வாட்டாள் நாகராசு ஆவேசமாக கூறியுள்ளார். அதோடு, பெங்களூரில் உள்ள தமிழர்கள் தண்ணீர் குடிக்கக் கூடாது, அது கன்னடர்களின் தண்ணீர் என்றும் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இச்சூழல்காவிரி மேலாண்மை ஆணையம், வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டு முடிந்துவிட்டது.
காவிரி ஆணையத்தின் பரிந்துரையையும் கர்நாடக அரசு செயல்படுத்த போவதில்லை. ஏற்கனவே ஒரு தடவை கூட காவிரி ஆணையத்தின் பரிந்துரையை கர்நாடகம் செயல்படுத்தியதும் இல்லை. அதன்மீது காவிரி ஆணையமும் மோடி அரசும் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை.
காவிரி ஆணையத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பலனும் இல்லை; தமிழ்நாட்டுக்கு சட்டப்படி கர்நாடகம் தரவேண்டிய காவிரி பங்கு நீரை, மோடி அரசும் பெற்றுத்தர முடியவில்லை; இனிமே பெற்று தர போவதில்லை.
ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி; கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் சரி. அவர்களை பொறுத்தவரை, தமிழர்கள் ஏமாளிகள்; இளிச்சவாயர்கள் என்பதே மன ஓட்டம்.
எனவே, காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன் வைத்தும், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதித்ததை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறது.