நேற்று, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (weather update) தெரிவித்திருந்த நிலையில்,
வரும் 10-ம் தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் (weather update) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், இன்றைக்குள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.