தமிழகத்தில், நாளை (மே 1-ம் தேதி) இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Meteorological Center) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
இன்று (ஏப்ரல் 30) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (மே 1-ம்) தேதியன்று இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் (Meteorological Center) கணித்துள்ளது.
மே 2-ம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும்,
மே 3-ம் தேதியன்று வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும்,
மே 4-ம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,
அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.