ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி கொன்டாடப்படும் என கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட `தமிழ்நாடு நாளை’ மாற்றி வேறொரு தேதியில் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என தீர்மானம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றிய நாளே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் எனவும், நவம்பர் 1-ஆம் தேதி எல்லை காக்க போராடிய தியாகிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மலையாளம் பேசும் மக்களும் கன்னடம் பேசும் மக்களும் தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.
தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.