தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி, தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தொடரில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23 புள்ளி 26 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் 23 ஆண்டுகள் பி.டி. உஷாவின் சாதனையை தனலட்சுமி தகர்த்து எறிந்தார். அந்த தொடரில் ஹிமா தாஸ், டுடி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தினார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கிராண்ட் ஃப்ரி தடகள பந்தயம் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் பந்தய தூரத்தை தனலட்சுமி 23 புள்ளி 21 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நட்சத்திர வீராங்கனை ஹிமா தாஸ் 23 புள்ளி 45 விநாடிகளில் கடந்ததால் அவருக்கு 2வது இடம் மட்டுமே கிடைத்தது. ஒலிம்பிக் தொடர் இதன் மூலம் ஹிமா தாஸை தனலட்சுமி தொடர்ந்து 2வது முறையாக வீழ்த்தியுள்ளார்.
தனலட்சுமி டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு ரிலே ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
தனலட்சுமியின் தந்தை சிறு வயதிலேயே உயிரிழந்த நிலையில், தாய் கூலி வேலை செய்து தனலட்சுமியை வளர்த்து வந்தார். தனலட்சுமியின் இரண்டு சகோதரிகளும் இறந்துவிட்டனர். இதில் ஒரு சகோதரி, தனலட்சுமி டோக்யோ சென்ற நிலையில் காலமானார். ஆனால், இந்த தகவலை அவரது குடும்பம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், தனலட்சுமி ஊர் திரும்பிய போது தான் அவர் உயிரிழந்த செய்தியை குடும்பத்தினர் தெரிவித்தனர். மீண்டும் சாதனை இதனால் விமான நிலையத்திலேயே தனலட்சுமி அழுது புலம்பினார். தனலட்சுமி தனது வாழ்க்கையில் இவ்வளவு இழப்பை சந்தித்த பிறகும் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு தற்போது மீண்டும் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். தனலட்சுமிக்கு அவரது பயிற்சியாளர் மணிகண்டன் தான் பக்க பலமாக இருந்து வருகிறார்.