நாளை முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுகிறது. அதன் பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கும் 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை பிப்ரவரி 17 காலை 10 மணி முதல் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காகவும், தேர்தலை நேர்மையாக நடத்த உதவி புரியும் வகையிலும் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதன்படி நாளை காலை 10 மணி முதல் பிப்ரவரி 19 நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் பிப்ரவரி 22 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் சென்னையிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.