புனித தோமையார் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஆசிரியயை அன்னாள் ஜெய மேரி, வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி நடராஜபுரம் கிராமத்தில் வசித்து வரும், ஆரோக்கியசாமி என்பவரது மனைவி அன்னாள் ஜெய மேரி. இவர் புள்ளம்பாடி ஆலம்பாக்கம் கிராமத்தில் உள்ள புனித தோமையார் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் ஆசிரியைராக கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
பள்ளியில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஆன்லைன் தேர்வும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புள்ளம்பாடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சரியாக இன்டர்நெட் வசதி இல்லாத காரணத்தால் ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வை நடத்திய ஆசிரியை அன்னாள் ஜெயமேரி, தேர்வு முடிந்தபின் பதிவு செய்த விபரங்களை பார்த்துள்ளார். அப்போது நாட் அசஸ்மென்ட் என தகவல் கிடைத்துள்ளது.
பதிவு செய்த விபரங்கள் செயலியில் இல்லை என்பதை கண்டு பதறிப்போன ஆசிரியை அன்னாள் ஜெயமேரி, பள்ளியில் சக ஆசிரியர்களிடம் பதட்டத்துடன் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, சக ஆசிரியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வகுப்பறையில் மாணவர்கள் கண் முன் ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.