கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப சுனாமி, நிலநடுக்கம், மண்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது அசாம் மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால், பெரும்பாலான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதற்கிடையே வளிமண்டலத்தில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் வரும் 27 ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கரையோரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியுள்ளது. இதனால் கடற்கரையில் ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக பாறைகளில் மோதியதாக கூறப்படுகிறது. குறிப்பாக சுமார் 10 அடி முதல் 15 அடி உயர்ந்து அலைகள் எழுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வராமல் இருப்பதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய அறிவிப்பால் கடலுக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.