மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள வைஜாப்பூர் தாலுகாவில் உள்ள லட்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.
இந்த பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரும் கல்லுரியில் படித்ததில் இருந்தே காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓடி சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என்று வைஜாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே எட்டு நாட்களுக்குப் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் இருவரும், வைஜாப்பூர் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த நிலையில், இதனை தொடர்ந்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண், கணவருடன் தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியின் தாய் மற்றும் சகோதரனைச் சந்தித்த பின் அந்த பெண் தேநீர் போடுவதற்கு சமையலறைக்கு சென்றுள்ளார்.
அப்போது பெண்ணின் 17 வயது சிறுவன் தனது சகோதரி என்றும் பாராமல் தான் வைத்திருந்த அரிவாளால் பெண்ணின் தலையை துண்டாக வெட்டியுள்ளார். அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து வந்து தாய் மகனை கைது செய்தனர்.
இது குறித்து கூறிய வைஜாபூர் போலீஸ் அதிகாரி கைலாஷ் பிரஜாபதி, பெண் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதால் சிறுவனும், அவனது தாயும் கோபத்தில் இருந்தனர்.பெண்ணின் தலையை வெட்டி, அதனுடன் இருவரும் செல்ஃபி எடுத்தது போல் தெரிகிறது. செல்போனை கைப்பற்றி பார்த்தபோது அதில் செல்பி படம் இல்லை.
தாய்-மகன் இருவரும் படத்தை நீக்கியுள்ளனர் என்று அவர் கூறினார். அந்த செல்பி புகைப்படம் ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பதால் அதை மீட்டெடுப்பதற்காக தடயவியல் ஆய்வுக்கு போலீசார் செல்போனை அனுப்பியுள்ளனர்.

மராத்தி படமான சைரத்தில் இதுபோன்று ஒரு ஆணவப்படுகொலை காட்சி வரும். அந்த படத்தை பார்த்து அதேபோல் சகோதரியை வெட்டியதாக கைதான சிறுவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.