ஈரோட்டில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் அலப்பறை செய்த குடிபோதை குத்துவிளக்கு பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் கோவை போக்குவரத்து கழக பேருந்து சென்று கொண்டிருந்தது . அதில் கரூர் பேருந்து நிலையத்தில் சாந்தி என்ற பெண்னும் வெள்ளைவேட்டி சட்டை அணிந்த ஒருவரும், சண்டை போட்டுக்கொண்டே குடிபோதையில் பேருந்தில் ஏறியமர்ந்துள்ளனர்.
பேருந்தில் ஏறிய அந்த குடிமகள் பேருந்துக்குள்ளேயே தகாத கொச்சை வார்த்தைகளால் தன்னுடன் வந்தவரை அர்ச்சனை செய்துகொண்டு வந்துள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பெண் பயணிகள் அந்த குடிகார பெண்ணின் கொச்சை வார்த்தைகளை கேட்டு முகம் சுளித்தபடி அமர்ந்திருந்தனர்.
இதற்கிடையில் போதை தலைக்கேறிய அந்த பெண், ஒரு நபரை “உனக்கு நெஞ்சில மஞ்சா சோறு இருந்தாநீ கீழ இறங்கி வாடா” என்றதோடு மிகவும் ஆபாசமான வார்த்தைகளை கொண்டு திட்டி தீர்த்தார். மேலும் அவரை அமைதியாக இருக்குமாறு கூறிய ஆண் பயணிகளையும் விட்டு வைக்காத அந்த குடிகார குத்துவிளக்கு, தகாத வார்த்தைகளால் கடுமையாக அர்ச்சனை செய்தார்.
மேலும் பேருந்தின் இருக்கைக்கு முன்பக்கம் உள்ள கம்பியின் மேல் கால் வைத்து கொண்டு கேள்வி கேட்கும் ஒவ்வொரு பயணியையும் தனது ஆபாச புலமையால் திட்டி தீர்த்திருக்கிறார் அந்த குடும்ப குத்துவிளக்கு.
பேருந்து செல்லச்செல்ல தலைக்கேறிய போதையால் பெண்ணின் ரவுடிசம் அதிகரிப்பதை பொறுத்து கொள்ள முடியாத பயணிகள், வேடசந்தூர் வந்த பேருந்தை காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்திய நிலையில், காவல் நிலையத்திற்கு பேருந்து விரைந்தது.
பிறகு பேருந்திலிருந்து பெண்ணை காவல்துறையினரிடம் பயணிகள் ஒப்படைத்தபோதும் தனது ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்வதை விடவில்லை. காவல்துறை முன்பாகவே தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண் ரவுடிசம் செய்ததால் காவல் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.
காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பேருந்தில் வந்த பயணிகள் கலைந்து சென்றனர். குடிபோதையில் கலாட்டா செய்த அந்த பெண் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிகார பேச்சு விடிஞ்சா போச்சு என்று பழமொழி சொல்வார்கள்.. ஆனால் இந்த குடிகார பெண்ணின் ஆபாச பேச்சுக்கள் விடிஞ்சாலும், இருண்டாலும் அந்த பயணிகளின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அளவிற்கு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.