ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்டுதான் செயல்படுகிறார் என எதிர்கட்சி துணை தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக துணைவேந்தர்களை நியமிப்பதற்கு ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை பறிப்பதாக கூறி பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ க்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு முன்னதாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சுட்டிக்காட்டி பேசியதால் அதிமுகவினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முன்னாள் முதல்வர்களின் பெயரை சட்டப்பேரவையில் பயன்படுத்தக் கூடாது” என கூறி சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சை நீக்கினார்.
இதனையடுத்து, வெளிநடப்பு செய்த எதிர்கட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம்;
ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டு கொண்டிருக்கிறார் எனவும் அரசியலமைப்புச் சட்டப்படி துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கிறார் எனவும் எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.