கன்னியாகுமரியில், காதலனுடன் பைக்கில் சென்ற பள்ளி மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், மாணவியை அம்போவென விட்டுச் சென்ற காதலனின் (insta boyfriend) செயலால் மாணவி பரிதாபமாக பலியான சம்பவம் அரங்கேறி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த 19 வயதான விஜூ என்ற இளைஞர் (insta boyfriend) இன்ஸ்டாகிராமில் மோட்டார் சைக்கிளில் ரீல் செய்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் 12-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் ஊர் சுற்றி வந்துள்ளார் விஜூ. இந்நிலையில், கணவனை இழந்த பெண்ணான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் தாய் தனது மகளை கூலி வேலை பார்த்து படிக்க வைத்துள்ளார்.
இதற்கிடையே, விஜு தனது மகளை காதலிப்பதை அறிந்த மாணவியின் தாயார் தனது மகளின் பின்னால் சுற்றுவதை நிறுத்தாவிட்டால் காவல்துறையில் புகார் அளித்து விடுவேன் என்று எச்சரித்துள்ளார். ஆனால், சில நாட்களுக்கு மாணவியை சந்திக்காமல் விலகி இருந்த விஜூ பின்னர் மாணவியிடம் ஆசிட் வீசி விடுவதாக மிரட்டி தன்னுடன் பேச வைத்துள்ளார்,
12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில், மகளை நர்சிங் படிக்க வைக்க முடிவெடுத்த மாணவியின் தாயார் தனது சகோதரர் மூலமாக பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை வழிமறித்து மிரட்டிய விஜூ மாணவியை கட்டாயப்படுத்தி தனது பைக்கில் ஏற்று சென்றுள்ளார்.
அப்போது, குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் வளைவில் பைக் அதிவேகமாக சென்ற நிலையில், விபத்தில் சிக்கிய மாணவி உயிருக்கு போராடியுள்ளார். இந்நிலையில் மாணவியை அங்கேயே அம்போவென விட்டுச் சென்ற விஜூ அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தான் மட்டும் சிகிச்சைக்காக சேர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த மாணவியை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சைக்காக மாணவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தனது மகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த அவரது தாயார், தனக்கு வசதி இல்லாததால் மகளை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து விஜூவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சிறிய பள்ளம் ஒன்றில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதால், பின்னால் அமர்ந்திருந்த மாணவி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த நிலையில் சாலையோரம் இருந்த தடுப்பு கம்பியில் மோதி தலையில் காயமடைந்ததாகவும் தான் கஞ்சா போதையில் இருந்ததால் மாணவியை அப்படியே அங்கேயே விட்டுவிட்டு தான் மட்டும் மருத்துவமனையில் சேர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விஜூ மீது மாணவியை பைக்கில் கடத்தி சென்றதாக போக்சோ சட்டத்தின் கீழும், அஜாக்கிரதையாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்நிலையில் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.