மதுரை மாவட்டதில் மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது .விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் ஆண்டு தோறும்நடைபெறும் சிறப்புப் பெற்ற விழாக்களில் ஒன்றான மாசிப்பெருந்திருவிழா கடந்த 25- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து சுவாமிகள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் விழாவின் சிறப்புப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் கோவில் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது .
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மேடையில் மணக்கோலத்தில் மத்தியபுரியம்மன் சுவாமி நன்மை தருவார் மற்றும் பிரியாவிடையுடன் எழுந்தருளத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்புப் பூஜைகளையடுத்து,வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிடத் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மணக்கோலத்தில் அருள்பாலித்த மத்தியபுரியம்மன் மற்றும் சுவாமி நன்மை தருவார். பிரியாவிடை ஆகியோர் கண்குளிரத் தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாகத் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது .
விழாவின் தொடர்ச்சியாக வரும் 7ம் தேதி பைரவ பூஜை நடைபெறுகிறது.