விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ம.நீ.ம. தலைவர் கமலஹாசன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த நிலையில், திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது..
“சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் ‘எழுச்சித் தமிழர்’ திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இன்று பிறந்த நாள் காணும் என் அன்புத் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்திய ஜனநாயகவாதி.
சமூக அநீதிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடுகிற புரட்சியாளர். சமூகநீதிக் கோட்பாட்டை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும்படி விளக்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர்.
இந்த இனிய நாளில், தம்பி திருமாவளவன் கையில் எடுத்திருக்கும் பெரும்பணிகள் வெல்க என வாழ்த்தி மகிழ்கிறேன். ஜெய் பீம்! என்று தெரிவித்துள்ளார்.