வடசென்னை திருவொற்றியூர் 10 வது வார்டு பகுதியில் மின்சாரம் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.
மழை குறைந்த பின்னர் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திருவொற்றியூர் 10 – வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா காலணி, சங்கரா காலணி, தேரடி பகுதியில் மின்விநியோகம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘விடியா அரசே, விடியா அரசே கரண்ட் கொடு, கரண்ட் கொடு’ என கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மின்வாரிய அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுத்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.