சூலூரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது குளத்தில் (pond) மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7).
இச்சிறுவர்கள், சூலூர் குளக்கரையில் தினம்தோறும் விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம் போல சிறுவர்கள், மூவரும் நேற்று மாலை குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து குளத்தில் (pond) தவறி விழுந்தனர்.
இதனை அருகில் இருந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, அவர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள்ளேயே மூன்று சிறுவர்களும் குளத்திற்குள் மூழ்கி விட்டனர்.
இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 3 சிறுவர்களையும் மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவர்களை பரிசோதனை செய்த மருத்துவர், 3 சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, 3 சிறுவர்ககளின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாடச் சென்ற சிறுவர்கள் பரிதாபமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.