எனது 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு மோசமாக ஒரு எதிரணி நடந்துகொண்டதை நான் பார்த்ததே இல்லை என இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் வங்கதேசம் அணி அபார வெற்றி பெற்றதுடன் இலக்கை அணியை தொடரில் இருந்து வெளியேற்றியுள்ளது.
இந்த போட்டியின்போது முதல் இன்னிங்ஸில், தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் 146 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ‘Timed Out’ ஆனார் இலங்கை வீரர் மேத்யூஸ்.
தவறான ஹெல்மெட்டை எடுத்து வந்ததால், சரியான ஹெல்மெட்டை இன்னொரு வீரர் எடுத்து வருவதற்குள் 2 நிமிடத்திற்கு மேல் ஆனது. அதற்குள் வங்கதேச அணி வீரர்கள் நடுவரிடம் அவுட் கேட்டு அப்பீல் செய்ய, விதிப்படி நடுவரும் வேறு வழியின்றி அவுட் கொடுத்தார்.
நீண்ட நேரம் நடுவரிடம் வாதம் செய்த இலங்கை வீரர் மேத்யூஸ் இறுதியில் வேறு வழியின்றி கோபத்துடன் பெவிலியனை நோக்கி சென்றார்.
இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தை உருக்கமாக தெரிவித்துள்ள ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியதாவது :
“எனது 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு மோசமாக ஒரு எதிரணி நடந்துகொண்டதை நான் பார்த்ததே இல்லை.
ஷகிப் மற்றும் வங்கதேச அணியின் செயல் மிகவும் அருவருக்கத்தக்கது. நான் 2 நிமிடத்திற்குள் பிட்சுக்கு வந்துவிட்டேன். ஆதாரத்தை வெளியிடுவோம். ஷகீப் மீது எனக்கு இருந்த அத்தனை மரியாதையும் சுத்தமாக போய்விட்டது என ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியதாவது :
இலங்கையின் மேத்யூஸ் ஆட வரும்போது எங்கள் அணியின் வீரர் ஒருவர் இப்போது மேல்முறையீடு செய்தால் அவர் அவுட் ஆவார் என தெரிவித்தார், அதனால் நான் நடுவரிடம் முறையீடு செய்தேன்.
இது சரியா, தவறான என எனக்கு தெரியவில்லை, ஆனால் அணியின் கேப்டனாக வெற்றிக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த முடிவை எடுப்பேன் என ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.