ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.
“தீராத வினைகள் தீர திருமயிலாடிக்கு வாருங்கள்… திருவருள் பெறுங்கள்” ! – என்றழைக்கும் திருத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமயிலாடியில் அமைந்துள்ளது.
‘தமிழ் கடவுள்’ என்று போற்றப்படும் முருகப்பெருமான், தமிழ்நாட்டிலேயே வடதிசை நோக்கி தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் இது ஒன்றுதான். இங்கு மூலவராக, ஸ்ரீ பிரகன்நாயகி சமேத, ஸ்ரீ சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கிறார்.
இத்தகைய பழைமைவாய்ந்த கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ்த் தாய் மகிழ்ச்சி கொள்கிறது.
“சிவமும் சக்தியும் கனியும் சுவையும் போல,மணியும் ஒலியும் போல, பிரிக்க முடியாமல் இணைந்து இருப்பதே சிறப்பானதாகும். திருக்கயிலையில் உமாதேவியுடன், சிவபெருமாள் வீற்றிருக்கையில், அவர்களுக்கு இடையே விளையாட்டாக விவாதம் ஒன்று நடந்தது.
‘இணையில்லா பேரழகு உடையவன் நான்தான்’ என்றார் சிவன். ‘ அழகுக்கு ஒப்புவாரில்லா வல்லி நானே’ என்றாள் பராசக்தி. முடிவில்லாத இவ்விவாதம் முடிவுக்கு வராமல் போகவே,திடீரென சிவன் மறைந்து போகிறார்.
சிவனை காணாத உமாதேவி திகைத்துப் போகிறாள். அதன்பின் சிவனை தேடி, தேவர்கள் மற்றும் அசுரர்கள் கண்களில் படாமல், மயில் உருவம் கொண்டு, திருமயிலாடி வந்து, சிவபெருமானை மனம் உருகி வணங்கித் துதித்தாள்.
” மயில் உருவத்தில் இருப்பதால் உன்னை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே மயிலாடுதுறை சென்று காவிரிக் கரையில் மணல் லிங்கம் பிடித்து வணங்கி வா. அதன்பின் ஏற்றுக் கொள்கிறேன்” என்கிறார் ஈசன்.
அதன்படி உமாதேவி மணல் லிங்கம் அமைத்து வழிபடவே, மீண்டும் பழையபடி அம்பாளாக மாறுகிறாள். அளவிலா விளையாட்டுத் தலைவனாகிய சிவபெருமான், உமாதேவியின் கண்ணுக்கினிய எழில்கோலத்தில் சுந்தரலிங்கமாக வெளிப்பட்டு, இத்தலத்தில் காட்சி அளித்தார்.
அதனால் தான் இவ்வாலயத்தில் சிவபெருமான் சுந்தரேஸ்வரராகவும், உமாதேவி பிரகன்நாயகியாகவும் மிகவும் அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.
அதுபோல முருகப்பெருமான், பத்மாசுரன் என்ற அரக்கனை வென்றதும், அவர் வடதிசை நோக்கி அமர்ந்துள்ளதும் சிலிர்ப்பூட்டும் கதையாகும். பத்மாசுரன் என்ற அரக்கன் சிங்களத் தீவில் ஆட்சி புரிந்து வந்தான். அவன் தேவர்களை துன்புறுத்தி, கொடுமைப்படுத்தினான்.
இதையும் படிங்க : ஸ்ரீ வேதாரண்யேசுவரர் கோயில்.. துலாக்கட்ட உற்சவ விழா!
இதனால் பத்மாசுரனுக்கும் தேவர்களுக்கும் பகை மூண்டது. பகையை வஞ்சனையால் வீழ்த்த எண்ணிய பத்மாசுரன் அபிசார வேள்வி செய்து, அந்த ஹோமத் தீயிலிருந்து ஜூர என்ற துஷ்ட தேவதையை வரவழைத்து, அவள் மூலம் தேவர் படையை கடும் வெம்மை நோயினாலும், வைசூரியாலும் வாட்டி வதைத்தான்.
தேவர்கள் போர் செய்யும் சக்தியின்றி, அழியத் தொடங்கியபோது, அவர்கள் முருகப்பெருமானின் உதவியை நாடி திருமயிலாடியை வந்தடைந்தனர். அப்போது இத்தலத்தில் வடதிசை நோக்கி தவம் செய்துக்கொண்டிருந்த முருகப்பெருமான், தேவர்களுக்கு உதவிட சீதளாதேவியை வரவழைத்தார்.
சீதளாதேவியும் ஜூர தேவதையை வென்று சிறைப்பிடித்து முருகப்பெருமானிடம் ஒப்படைத்தார். தேவர்களும் சோர்வு நீங்கி புதிய சக்தியோடு போரிட்டு அசுரர்களை வென்றனர்.
தேவர் தலைவனாகிய இந்திரன், முருகப்பெருமானை தவக்கோலத்தில் இத்தலத்திலேயே இருந்து வழிபடுவோர் அனைவருக்கும் அருள்புரிய வேண்டி, பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்படியே திருமயிலாடியில் முருகப்பெருமான் இன்றும் வடதிசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்” என்கிறது தலவரலாறு.
கருவறைக்கு தெற்கே குமாரவிநாயகர், அருகில் ஸ்ரீ பாலசுப்பிரமணியர், கன்னிமூலையில் ஸ்ரீ சித்திவிநாயகர், தென்திசையில் பத்மாசனக் கோலத்தில தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், குபேரமூலையில் மகாலட்சுமி, வடதிசையில் விநாயகர், அடுத்து ஜெயதுர்கா பரமேஸ்வரி, அதன் எதிரே சண்டிகேஸ்வரர், சிவகாமி அம்மை உடனாய நடராஜமூர்த்தி, அருணாசலேஸ்வரர், மற்றும் நவகிரகங்கள் இத்தலத்தில் அமையப்பெற்றுள்ளன.
தேவர்களின் தீராத பிரச்னைகளையே தீர்த்த திருத்தலம் திருமயிலாடி. எனவே பக்தர்களின் பிரார்த்தனைகள் எதுவானாலும், அதனை நிறைவேற்றி வைக்கும் திருத்தலமாக திகழ்கிறது.
அதுபோல் திருமணத் தடை அகல, குழந்தைப்பேறு கிடைக்க, வேலை வாய்ப்பு பெற, இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, எங்கும் காண முடியாத இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டால் கிட்டுவது உறுதி” என்கிறார் சுந்தர்ராஜ் சிவாச்சாரியார்.
மீண்டும் ஒர் அற்புத ஆலயத்தில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது ஐ தமிழ் !