தமிழக அரசின் மாணவர்களுக்கான இலவச லேப் – டாப் வழங்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோர நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததன் காரணமாகவே, கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச லேப் – டாப்கள் வழங்க முடியவில்லை என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து உள்ளது.
தமிழக அரசின் சார்பில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப் – டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப் – டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் கடந்த கல்வி ஆண்டு மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு இலவச லேப் – டாப்கள் வழங்கப்படாமல் உள்ளன.
தமிழக அரசு வழங்கக் கூடிய இலவச லேப் – டாப்களை தயாரிக்க அரசு அழைப்பு விடுத்த போதிலும் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என தெரிய வந்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக, வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறை இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதால், அவற்றின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சந்தைகளுக்கு அனுப்பப்படும் லேப் – டாப்களில் விலை 30 ஆயிரத்திற்கும் அதிகமாகும். தற்போதைய கொரோனா கால கட்டத்தை பயன்படுத்தி அதிக விலை கொண்ட லேப் – டாப்களை தயாரிக்கவே நிறுவனங்கள் விரும்புவதே டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டாதது என்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய லேப் – டாப்களை உரிய நேரத்தில் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவாக மாணவர்களுக்கு இலவச லேப் – டாப்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.