கோவையில் நடைபெற்ற ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் தொடக்க விழாவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குறித்து மாணவர்களிடத்தில் முதலவர் ஸ்டாலின் எழுச்சியுரையாற்றியுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சந்தித்த சவால்கள் குறித்து கூறினார் :
ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பலவீனமாக வீட்டிற்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் கொண்ட பெண்ணாக போராடி நாம் அனைவரும் பாராட்டும் அளவிற்கு கொடி கட்டி பறக்கிறார்.
சவால்களை கண்டு அஞ்சாமல் அதனை எதிர்கொள்ள அனைவரும் பழக வேண்டும் . தடைகள் என்பது உடைத்தெறியத்தான். தடைகளை பார்த்து ஒருபோதும் சோர்ந்துவிடக்கூடாது. வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்.
உங்கள் மேல் உங்களைவிட நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு பின் உங்கள் பெற்றோர் மட்டுமல்ல திமுக அரசும் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.