தொடர் கனமழையால் தூத்துக்குடியில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரிடரை எதிர்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள 8 அமைச்சர்கள் மற்றும் IAS அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் .
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழு தேசிய பேரிடர் மீட்புக் குழு தீயணைப்புத்துறை காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதாக இன்று தூத்துக்குடிக்குச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார் .
சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். ஆய்வு பணியின் போது தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.