கடந்த சில நாட்களாக தக்காளிவின் விலை அதிகரித்திருந்த நிலையில் இன்று விலை குறைவடைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழையால் விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தக்காளி செடிகள் தண்ணீரில் மூழ்கி காய்கள் அழுகின. சந்தைகளுக்கு தக்காளிவின் வரத்து குறைந்ததை அடுத்து அதன் விலை உச்சத்திற்கு சென்றது.
இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து தமிழக அரசும் பண்ணை பசுமை காய்கறிகள் மூலமாக நேற்று முதல் தக்காளி ஒரு கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை செய்தது. பலரும் வரிசையில் நின்று தக்காளியை வாங்கிச் சென்றனர்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை குறையத் தொடங்கியுள்ளது. நேற்று வரை ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே சமயம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய் வரை விற்பனை ஆனது.
இந்த நிலையில் இன்று லாரிகளில் வரத்து அதிகரித்ததால், தக்காளியின் விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.