சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் நாட்டில் கடந்த 12 நாட்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு 70 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததே விலை ஏற்றத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நாளொன்றுக்கு ஆயிரத்து 100 டன் தேவை உள்ள நிலையில் இன்று காலை 30 லாரிகளில் 380 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை நேற்று முன்தினம் சற்று விலை குறைந்து 95க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதனால் ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் 105 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.