பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான் என கழக தொண்டர்களுக்கு தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் பின்வருமாறு :
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான மதவாதக் கொள்கை கொண்ட ஆட்சியை அகற்றிட இந்தியா கூட்டணி உருவாகி, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு மகத்தானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிட, தமிழ்நாடு, புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கான கட்டமைப்பை இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்பே நாம் தொடங்கிவிட்டோம்.
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை உருக்குலைத்து, தமிழ்நாட்டு மாணவமணிகளின் மருத்துவப் படிப்புக் கனவைச் சிதைக்கும் நீட் எனும் கோடரிக்கு எதிராகத் தம்பி உதயநிதி அவர்கள் கழக இளைஞரணி-மாணவரணி-மருத்துவ அணியை இணைத்து தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கமும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீட்டை விரட்டும் இயக்கத்திற்கான முதல் கையெழுத்தைக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி நடத்திய நிகழ்வில் உங்களில் ஒருவனான நான் போட்டேன். இந்தக் கையெழுத்து இயக்கத்தில், கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் பங்கேற்று கையெழுத்திடுவது மட்டுமின்றி, அவரவர் பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் நீங்கள் கையெழுத்தைப் பெற வேண்டும். 50 இலட்சம் என நிர்ணயித்திருக்கின்ற இலக்கையும் தாண்டி உங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவக் கனவு சிதைகின்ற அச்சத்தில் உள்ள மாணவர்கள், நீட் தேர்வினால் பெரும் அவதிக்கு உள்ளாகும் பெற்றோர் ஆகியோரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் இளைஞரணியின் மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தென் திசையிலிருந்து எத்திசைக்கும் பரவுகின்ற வகையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டைக் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது. அதற்குப் பாக முகவர்களும், பூத் கமிட்டியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொகுதிப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்போரும் வாரம் ஒரு முறையேனும் தொகுதிக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரின் பணிகளையும் மூத்த தொண்டன் என்ற முறையில் கழகத்தின் தலைவனான நான் கண்காணித்து, ஒவ்வொரு தொகுதியின் நிலவரத்தையும் பெற்றுக் கொண்டுதான் இருப்பேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் புரட்சித் திட்டம், பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட மகத்தான திட்டங்களின் பயன்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவேண்டும். அது பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசின் திட்டங்கள் எவருக்கேனும் கிடைக்காமல் இருந்தால், அவர்கள் தகுதியான விண்ணப்பதாரர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அரசின் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும்படி செய்திட வேண்டியது தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய – நகரச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியினைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நாட்களில் நம்முடைய கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து, யார் யார் உண்மையான வாக்காளர்கள், யார் யார் போலியானவர்கள், இறந்துபோனவர்கள் எத்தனை பேர், இடம் மாறியவர்கள் எத்தனை பேர், இரண்டு இடங்களில் பெயர் கொடுத்திருப்போர் யார் என்பது உள்ளிட்டவற்றைக் கவனித்திட வேண்டும்.
சென்னை மண்டல பாக முகவர்கள் கூட்டம் நடைபெறும் நாளான நவம்பர் 5-ஆம் நாளன்று கூட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெறவிருக்கிறது. தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் இருக்கக்கூடிய பூத் கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு அந்தப் பணியைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக! ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க.வின் கைகளிலிருந்து காப்பாற்றும் வகையிலும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்கள் செய்துவிட்டு, இப்போது கூட்டணி முறிந்துவிட்டதாக வேடம் போடும் அ.தி.மு.க.வின் கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்தும் வகையிலும் வீடு வீடாக உங்கள் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று கடந்த 2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் என் முழக்கத்தை முன்வைத்தேன். அதைச் செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று, இன்று இந்தியா முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்! ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் கழகப் படை. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்! என்று இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.